மாசி மகம்.. தஞ்சாவூர் மாவட்டத்தில் மார்ச் 2ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் மார்ச் 2ம் தேதி மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். தென்னிந்தியாவின் கும்பமேளா என்று போற்றப்படும் கும்பகோணம் மகாமகக் குளத்தில் நடைபெறும் மாசி மகத் திருவிழா உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி (மாசி 18) மாசி மகம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, உள்ளூர் மக்களும் திருவிழாவில் கலந்துக் கொள்ள வசதியாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தும். இந்த விடுமுறை வங்கிகளுக்குப் பொருந்தாது. மேலும், மருத்துவமனைகள், தீயணைப்புத் துறை போன்ற அத்தியாவசியச் சேவைகள் வழக்கம் போல் செயல்படும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், மார்ச் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் மகம் நட்சத்திரம் இணைந்து வரும் நாளில் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு சைவ மற்றும் வைணவத் தலங்களில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு, மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடுவார்கள்.
