கும்பகோணம் மகாமகக் குளத்தில் மாசி மகத் தீர்த்தவாரி... ஆயிரக்ககணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

 
மகாமகம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உலகப் புகழ்பெற்ற மாசி மகத் திருவிழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத்தைப் போன்றே, ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாசி மகத் தீர்த்தவாரி நிகழ்வும் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

கும்பகோணத்தில் உள்ள முக்கிய சிவாலயங்கள் மற்றும் வைணவத் தலங்களில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வந்த மாசி மகத் திருவிழாவின் உச்ச நிகழ்வாக இந்தத் தீர்த்தவாரி அமைந்தது.

மாசி மகம்

நேற்று காலை முதலே கும்பகோணம் மகாமகக் குளத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், நாகேஸ்வரர் உள்ளிட்ட 12 சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி மகாமகக் குளத்தின் கரையில் எழுந்தருளினர்.

சுவாமிகளுக்கு அஸ்திரதேவர் மூலம் தீர்த்தவாரி நடைபெற்ற அதே வேளையில், குளத்தைச் சுற்றியுள்ள 20 தீர்த்தக் கிணறுகளிலும், குளத்திலும் பக்தர்கள் புனித நீராடித் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

கும்பகோணம் ஆதி கும்பேசுவரர்

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை 'மகாமகம்' திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். கடைசியாக 2016-ஆம் ஆண்டு மகாமகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தப் பெரிய மகாமகத் திருவிழா வரும் 2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகத்தைத் தவிர்த்து, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்தன்று 'மாசி மகம்' சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால், கும்பகோணம் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மகாமகக் குளத்தைச் சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதுடன், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தத் தீயணைப்புத் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.