மாஸ் வீடியோ... பால ராமரை வழிபட்ட சூரியன்... அயோத்தி முழுவதும் மெகா சைஸ் திரைகளில் ஒளிபரப்பு!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தி பால ராமர் கோயிலில் ராம நவமி கொண்டாட்டம் தொடங்கியது. அயோத்தி ராமர் கோயிலின் முதல் ராம நவமிக்கான கொண்டாட்டங்கள் இன்று அதிகாலை முதல் விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.அயோத்தியில் பிரம்மாண்டமான பிரான் பிரதிஷ்டை விழாவிற்குப் பின்னர், ராம ஜென்மபூமி எதிர்கொள்ளும் இரண்டாவது திருவிழாவாக ராம நவமிக்கான கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
இந்த கொண்டாட்டங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை நிர்வாகம் செய்து வருவதாக ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்திருக்கிறார். இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவிலில் தரிசனம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் அதிகாலை ராம் மந்திரில் குவிந்தனர். கோயிலுக்குச் செல்வதற்கு முன், பக்தர்கள் சரயு நதியில் புனித நீராடினர்.
ராம நவமி தினத்தில் ஸ்ரீராமரின் நெற்றியில் சூரியக் கதிர்களை தரிசிக்க கிடைக்கும் வாய்ப்புக்காக பக்தர்கள் ஆவலுடன் காத்துக்கிடக்கின்றனர். அயோத்தியில் பக்தர்களின் கூட்ட நெரிசல் மற்றும் அதையொட்டிய தடுமாற்றங்களைத் தவிர்க்க, ராம நவமி கொண்டாட்டங்களை அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனின் நேரடி ஒளிபரப்பில் தரிசிக்குமாறு முன்னதாக வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இவற்றுக்கு அப்பால் ராமர் கோயிலில் நடக்கும் சடங்குகளை நேரடியாக ஒளிபரப்ப நகரின் 100 இடங்களில் எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. இன்று ராம நவமியை முன்னிட்டு ராமர் கோயில் தொடர்ந்து 20 மணி நேரத்துக்கு திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளின் பொருட்டு அயோத்தி முழுவதும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்கான பிரசாத தயாரிப்புக்கான பணிகளும் கடந்த 10 நாட்களாக ஜரூராக நடைபெற்று வந்தன. தினமும் குறைந்தது 50,000 கிலோ பிரசாதம் தயார் செய்யப்பட்டது.

ராம நவமியை ஒட்டி பிரதமர் மோடி வாழ்த்துகளை பகிர்ந்திருக்கிறார். "பகவான் ஸ்ரீராமரின் பிறந்தநாளான ராம நவமியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு எல்லையற்ற நல்வாழ்த்துக்கள். கோடிக்கணக்கான என் நாட்டு மக்களுடன், நான் அயோத்தியில் பிரான் பிரதிஷ்தாவின் சாட்சியாக இருந்தேன். அவத்புரியின் அந்த தருணத்தின் நினைவுகள் இன்னும் அதே ஆற்றலுடன் என் மனதில் துடிக்கிறது
அயோத்தியின் பிரம்மாண்டமான மற்றும் தெய்வீகமான ராமர் கோவிலில் நமது ராம் லல்லா வீற்றிருக்கும் முதல் ராம நவமி இது. இன்று, அயோத்தி இந்த ராம நவமி கொண்டாட்டத்தில் இணையற்ற மகிழ்ச்சியில் உள்ளது. 5 நூற்றாண்டுகள் காத்திருந்ததன் பாக்கியம் இன்று சேர்ந்துள்ளது. இந்த ராம நவமியை அயோத்தியில் கொண்டாடுவது, நாட்டு மக்களின் பல வருட கடின தவம், தியாகம் மற்றும் தியாகத்தின் பலன்” என்று உருகி இருக்கிறார்.
