மாஸ்.. யார் யாருக்கு வாய்ப்பு... நாளை 234 தொகுதிகளின் தவெக வேட்பாளர்கள் அறிமுகம்!
திமுகவுடன் தான் நேரடி போட்டி என்று களமிறங்கி இருக்கும் தவெக, நாளை 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்துகிறது.
வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் அதிகாரியிடம் முறையான அனுமதி பெற வேண்டும் மற்றும் அதிகப்படியான நபர்களைக் கூட்டக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. அனுமதியின்றி அரசியல் கூட்டங்களை நடத்தினால் விடுதிக்குச் சீல் வைக்கப்படும் என விடுதி நிர்வாகம் எச்சரித்ததால், மாமல்லபுரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

தற்போது இந்த முக்கிய நிகழ்வு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது. நாளை நடைபெறும் விழாவில், 234 தொகுதிகளிலும் களம் காணும் தவெக வேட்பாளர்களைத் தலைவர் விஜய் நேரில் அறிமுகம் செய்து வைக்கிறார். இதற்கான முறையான அனுமதியைப் பெறத் தவெக நிர்வாகிகள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கடிதம் அளித்துள்ளனர்.

ஏற்கனவே புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தற்போது தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்ய இருப்பது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இந்தப் பட்டியலில் எவ்வளவு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய அரசியல் வட்டாரங்கள் ஆவலாக உள்ளன.
