குஜராத் சூரத் ஜவுளி மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து - 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் போராட்டம்!
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பிரபல ஜவுளி சந்தைக் கட்டடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
சூரத்தின் சரோலி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஷ்யாம் சங்கினி ஜவுளி சந்தை கட்டடத்தில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. அதிகாலை 12:52 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக அருகிலுள்ள நிலையங்களிலிருந்து வாகனங்கள் அனுப்பப்பட்டன.

சந்தைக் கட்டடத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது தளங்கள் முழுவதுமாகத் தீப்பிடித்து எரிந்தன. இந்தத் தளங்கள் சுமார் 20 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதாலும், கடுமையான அடர்ந்த புகைமூட்டம் காரணமாகவும் உள்ளே செல்வது தீயணைப்பு வீரர்களுக்குச் சவாலாக அமைந்தது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர சூரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுழலும் ஏணிகள் மற்றும் ஹைட்ராலிக் மேடைகள் பொருத்தப்பட்ட 20 முதல் 22 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுத் தீவிர மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கட்டடத்திற்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், சுவாசக் கருவிகளைப் பயன்படுத்தித் தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் கட்டடத்திற்குள் யாரும் சிக்கியதாகத் தகவல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
