காஷ்மீரில் கடும் நிலச்சரிவு... மண்ணில் புதைந்த வாகனங்களை மீட்கும் மீட்புக்குழுவினர்!

 
காஷ்மீர் நிலச்சரிவு மண்ணில் புதைந்த வாகனங்கள்

ஜம்மு காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் கடுமையான நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள 540 மெகாவாட் 'குவார்' நீர்மின் நிலைய கட்டுமானப் பகுதிக்கு அருகே இன்று அதிகாலையில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து உருண்டு வந்த டன் கணக்கிலான பாறைகள், மண் மற்றும் இடிபாடுகள் அந்த வளாகத்திற்குள் புகுந்தன. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கட்டுமானப் பணி வாகனங்கள், கனரக டோசர்கள் மற்றும் லாரிகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் திடீரென மண்ணுக்குள் புதைந்து முற்றிலும் சேதமடைந்தன.

இந்த நிலச்சரிவு அதிகாலையில் ஏற்பட்டதால், அதிர்ஷ்டவசமாக  யாரும் இடிபாடுகளில் சிக்கவில்லை; உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாகத் தோடா - கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி கடுமையாகச் சேதமடைந்துள்ளது. பிரேம் நகர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் வெள்ளம் அடித்து வந்த இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளன. இதனால் இந்த வழித்தடத்தில் தற்காலிகமாகப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கையைச் சீரமைக்கவும், மண்ணில் புதைந்துள்ள வாகனங்களை மீட்கவும் மாவட்ட நிர்வாகம், மீட்புக்குழுவினர் மற்றும் கனரக இயந்திரங்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் தீவிரமாக முடுக்கப்பட்டு வருகின்றன. நிலைமை சீராகும் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த நெடுஞ்சாலைப் பயணத்தைத் தவிர்க்குமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.