தவெக அரசைக் கண்டித்து டிசம்பர் 2ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

 
எடப்பாடி

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசைக் கண்டித்து, வரும் டிசம்பர் 2-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அதிமுகவின் 85 அமைப்பு ரீதியான மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைந்து 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்தக் காலகட்டத்தில் மிகப் பெரிய அளவில் தமிழ்நாட்டைப் பின்னோக்கி இழுக்கின்ற வேலையை இந்த அரசாங்கம் செய்திருக்கிறது. மூன்று மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டவர்கள், 6 மாத காலம் நிறைவு பெற்றிருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டு மக்களின் மிகப் பெரிய துயரமாக மாறி நிற்கிறார்கள்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எடப்பாடி

‘எங்கும் போதை, எதிலும் போதை’ என்கிற அளவிற்கு மாநிலமே தள்ளாடுகின்ற நிலை ஏற்பட்டிருக்கும்போதும், முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புரிதல்கூட இல்லாமல் அமர்ந்திருக்கிறார் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஒருபுறம் சமூக விரோதிகளால் சட்டம் - ஒழுங்கு சீரழிக்கப்படுகிறது என்றால், மறுபுறம் ‘வேலியே பயிரை மேய்வது போல’ த.வெ.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தொடர்ந்து சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.

த.வெ.க. ‘ரீல்ஸ் மாடல்’ ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழிக்கின்ற வகையிலும், அவர்களுடைய மக்கள் விரோத, ஜனநாயக விரோத ஆட்சியை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துகின்ற வகையிலும், அதிமுக அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் 85 மாவட்டங்களின் சார்பில் வருகிற 2-ஆம் தேதி காலை 10 மணியளவில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி

இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் தலைமைக் கழகச் செயலாளர்கள் தலைமையிலும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் முன்னிலையிலும் நடைபெறும். இதில் அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், தொண்டர்கள், மகளிர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.