இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80% சரிவு.. ஆய்வில் தகவல்!
இந்தியாவில் தாய்மார்களின் பாதுகாப்பு மற்றும் மகப்பேறு கால சிகிச்சையில் அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் காரணமாக, மகப்பேறு இறப்பு விகிதம் கடந்த 1990-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 80 சதவீதம் வரை குறைந்துள்ளதாகப் புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
'தி லான்செட்' ஆய்விதழின் தரவுகளின்படி, 1991ல் இந்தியாவில் ஒரு லட்சம் நேரடி பிறப்புகளுக்கு சுமார் 508 தாய்மார்கள் உயிரிழக்கும் அவலநிலை இருந்தது. 2023ல் இந்த எண்ணிக்கை மிகக் கடுமையாகக் குறைக்கப்பட்டு, தற்போது 116 ஆக உள்ளது. 1990-களில் ஆண்டுக்கு 1.5 லட்சத்திற்கும் அதிகமான தாய்மார்கள் உயிரிழந்து வந்த நிலையில், 2023-ல் இந்த எண்ணிக்கை 24,700 ஆகக் குறைந்துள்ளது.
இந்தியாவின் இந்தச் சாதனைக்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணங்களாக மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுபவை: வீடுகளில் பிரசவம் பார்ப்பது குறைக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் நடப்பது பெருமளவு அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் நிதியுதவித் திட்டங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் உயர்த்தப்பட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் முறையான தடுப்பூசிகள் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து விழிப்புணர்வு.

மகப்பேறு இறப்பு விகிதம் 80% குறைந்திருந்தாலும், 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 70-க்கும் கீழ் இந்த எண்ணிக்கையைக் கொண்டு வர வேண்டும் என்ற இலக்கை அடைய இந்தியா இன்னும் தீவிரமாக உழைக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் ரத்த சோகை மற்றும் பிரசவத்தின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு ஆகியவற்றைத் தடுப்பதில் கூடுதல் கவனம் தேவை என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
