யாசகம் தர மறுத்த பெண் மீது கொடூரத் தாக்குதல்... மூக்கை கடித்து மூக்குத்தி பறிப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் யாசகம் தர மறுத்த மும்பையைச் சேர்ந்த பெண்ணை தாக்கி, அவரது மூக்குத்தியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மும்பையைச் சேர்ந்த மோனிகா என்பவர் மதுராவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஒருவர் யாசகம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மோனிகா பணம் கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், மோனிகாவை அருகில் இருந்த புதருக்குள் தள்ளியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை தாக்கி கழுத்தை நெரிக்க முயன்றதுடன், மூக்கில் கடித்ததாகவும் கூறப்படுகிறது.இந்த தாக்குதலில் மோனிகா காயமடைந்தார். மேலும் அவரது மூக்கில் அணிந்திருந்த மூக்குத்தியையும் அந்த நபர் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், காயமடைந்த மோனிகாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சந்தேகிக்கப்படும் நபரை அடையாளம் கண்டு கைது செய்ய போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
