மயிலாடுதுறைக்கு நவம்பர் 16-ல் உள்ளூர் விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள காவிரி கடைமுகத் தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு, வரும் நவம்பர் 16ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில் கடைமுகத் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ள இவ்விழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரியில் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை பொருந்தும்.

நவம்பர் 21 வேலை நாள்
நவம்பர் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நவம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமை முழு வேலை நாளாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர அரசு பணிகளுக்காக குறிப்பிட்ட கருவூலப் பணிகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
