உணவுப் பிரியர்களே உஷார்... மயோனைஸ் தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

 
mayonaise mayonaise

தமிழகத்தில் பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் மீதான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட இந்த தடைக்காலம் முடிவடைந்த நிலையில், பொதுமக்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஷவர்மா, கிரில் சிக்கன் போன்ற உணவுகளுடன் பரிமாறப்படும் இந்த வகை மயோனைஸ், தீவிரமான உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்துவதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு வலுவாக்கப்பட்டுள்ளது.

mayonaise

பச்சை முட்டையைப் பயன்படுத்தி செய்யப்படும் மயோனைஸில் சால்மோனெல்லா போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் எளிதில் வளர வாய்ப்புள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. முறையான வெப்பநிலையில் இவை சேமிக்கப்படாதபோது, அதனை உண்ணும் மக்களுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006-ன் கீழ், இதன் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்திற்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மயோனைஸ்

அதே சமயம் சைவ மயோனைஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட முட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ்களுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பச்சை முட்டை மயோனைஸை விற்பனை செய்யும் உணவகங்கள் மற்றும் கடைகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் வெளியே உணவருந்தும்போது கூடுதல் கவனத்துடன் இருக்குமாறும், தரமான உணவுகளை மட்டுமே தேர்வு செய்து உண்ணுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.