அமெரிக்காவில் விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு - மேயர் கேட்டி வில்சன் பெருமிதம்!

 
அமெரிக்கா  விவேகானந்தர் அமெரிக்கா  விவேகானந்தர்

சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு சிகாகோவில் முழங்கிய சுவாமி விவேகானந்தரின் குரல், இன்றும் உலகெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அதன் அடையாளமாக, அமெரிக்காவின் சியாட்டில் மாநகரின் மையப்பகுதியில் சுவாமி விவேகானந்தரின் பிரம்மாண்ட முழு உருவச் சிலை நேற்று கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.

சியாட்டில் மாநகரின் புகழ்பெற்ற வெஸ்ட்லேக் சதுக்கத்தில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் சார்பில், இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் விதமாக இந்தச் சிலை சியாட்டில் நகருக்குப் பரிசாக வழங்கப்பட்டது.

விவேகானந்தர் மண்டபம்

சியாட்டில் மாநகர மேயர் கேட்டி வில்சன் இச்சிலையைத் திறந்து வைத்தார். இதில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் பல நாட்டுப் பிரதிநிதிகள் திரளாகப் பங்கேற்றனர்.

1893-ல் சிகாகோ உலகச் சமய மாநாட்டில், "அமெரிக்க சகோதர சகோதரிகளே..." எனத் தொடங்கி விவேகானந்தர் ஆற்றிய உரை, மேற்கத்திய நாடுகளுக்கு இந்திய ஆன்மிகத்தின் பெருமையை உணர்த்தியது.

அந்த வரலாற்றுப் பயணத்தின் நினைவாகவும், தற்கால இந்திய-அமெரிக்க கலாசார உறவுகளின் பாலமாகவும் இச்சிலை அமைந்துள்ளதாக மேயர் கேட்டி வில்சன் புகழாரம் சூட்டினார். "விவேகானந்தரின் கொள்கைகள் இன்றைய உலகிற்கு மிகவும் அவசியமானவை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

சியாட்டில் நகரின் முக்கியமான பொது இடத்தில் விவேகானந்தரின் சிலை அமைக்கப்பட்டிருப்பது, அங்குள்ள இந்தியச் சமூகத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சியாட்டில் வரும் சுற்றுலாப் பயணிகளையும், இந்தியக் கலாசாரத்தின் பால் ஈர்க்கும் ஒரு முக்கிய அடையாளமாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.