மேயர் பதவியைத்தாண்டி ஒரு பெண்ணாக மதியுங்கள் - மேயர் பிரியா உருக்கம்!
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பொது வாழ்க்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட விமர்சனங்கள் மற்றும் அவமதிப்புகள் குறித்துப் பகிரங்கமாக வேதனைத் தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பதிவு தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தான் செய்யும் மிகச் சாதாரணமான விஷயங்கள் கூடத் தொடர்ந்து சர்ச்சையாக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தான் பர்கர் சாப்பிடுவதோ அல்லது முடியை வெட்டுவதோ கூடப் பொது வெளியில் கேள்விகுக் குள்ளாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தான் ஒரு பெண் என்பதாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதாலோதான் இதுபோன்ற பிரச்சினைகள் வேண்டுமென்றே உருவாக்கப்படுகிறதா என்ற கேள்சியை அவர் எழுப்பியுள்ளார். மேலும், பெண்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்கள் இதுபோன்ற தருணங்களில் மௌனமாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
அரசியலில் இயங்கும் பெண்கள் எப்போதுமே ஒழுக்கமற்றவர்கள் அல்லர் என்றும், அவர்களைக் குறைவான மரியாதையுடன் நடத்துவதைத் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு பெண்ணின் தோற்றம், வாழ்க்கை முறை மற்றும் தனிப்பட்ட விருப்பங்களை வைத்து அவரைத் தீர்ப்பளிக்க யாருக்குரிமையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள மேயர் பிரியா, 'மேயர்' என்ற அரசியல் அடையாளத்திற்கு அப்பால் முதலில் ஒரு பெண்ணாகவும் அவரது சுயமரியாதையுடனும் மதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
