தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு தயார் - எகிறும் MBBS கட்-ஆஃப் மதிப்பெண்கள்!
தமிழ்நாட்டில் 2026-27 கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக் கலந்தாய்வு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் விவரங்கள் வெளியாகியுள்ளன.
இந்த முறை நீட் தேர்வில் தேசிய அளவிலும் தமிழக அளவிலும் அதிக மதிப்பெண்கள் பெறப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டை விட கட்-ஆஃப் கணிசமாக உயரும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
தேசியத் தேர்வு முகமை வெளியிட்ட முடிவுகளின்படி, நீட் 2026 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தேசிய அளவில் 600 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டிலும் 600 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைக் கைப்பற்றிய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது. பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் வரம்பு கடந்த ஆண்டின் 144 மதிப்பெண்களிலிருந்து இந்த ஆண்டு 213 மதிப்பெண்களாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டை விட சுமார் 30 முதல் 40 மதிப்பெண்கள் வரை உயரக்கூடும் எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படும் உத்தேசக் கட்-ஆஃப் நிலவரம்:
பொதுப் பிரிவு 610 - 620 மதிப்பெண்களுக்கு மேல். பிற்படுத்தப்பட்டோர்: 560 - 575 மதிப்பெண்களுக்கு மேல். பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம்: 535 - 550 மதிப்பெண்களுக்கு மேல். மிகவும் பிற்படுத்தப்பட்டோர்: 530 - 545 மதிப்பெண்களுக்கு மேல். ஆதிதிராவிடர் 445 - 460 மதிப்பெண்களுக்கு மேல். ஆதிதிராவிடர் அருந்ததியர் : 380 - 395 மதிப்பெண்களுக்கு மேல். பழங்குடியினர்: 355 - 370 மதிப்பெண்களுக்கு மேல்
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு உள்ஒதுக்கீட்டின் கீழும் இந்த ஆண்டு கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BC / MBC பிரிவினர்: 350 - 370 மதிப்பெண்கள் வரை. SC / ST பிரிவினர்: 300 - 320 மதிப்பெண்கள் வரை இருந்தால் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சீட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு கூடுதல் மருத்துவ இடங்கள் சேர்க்கப்பட்டாலும், மாணவர்களின் மதிப்பெண் சராசரி அதிகமாக இருப்பதால், மருத்துவக் சேர்க்கைக் கலந்தாய்வில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் கலந்தாய்வில் ஒவ்வொரு சமூகப் பிரிவினருக்கும் எதிர்பார்க்கப்படும் விரிவான கட்-ஆஃப் மற்றும் தரவரிசைப் பற்றிய புரிதலைப் பெற இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
