திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் மதிமுக - ஜூன் 27 பொதுக்குழுவில் இறுதி முடிவு!

 
வைகோ வைகோ

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பெரும் சலசலப்புகள் நிலவி வருகின்றன. காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற முக்கியக் கட்சிகள் ஏற்கனவே புதிய தவெக அரசுடன் கரம் கோர்த்து அமைச்சரவையில் பங்கெடுத்துள்ள நிலையிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் சூழலிலும், கூட்டணியில் எஞ்சியிருக்கும் மதிமுக-வின் அடுத்தகட்ட நகர்வு குறித்து அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.

கூட்டணி மாற்றம் மற்றும் கட்சியின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து மதிமுக-வின் முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ அண்மையில் திருச்சியில் விளக்கமளித்திருந்தார். மதிமுக தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது மாற்றுப் பாதை குறித்து ஆலோசிப்பதா என்பது தனிப்பட்ட ஒருவரின் முடிவு அல்ல. இது குறித்து விவாதிக்க வரும் ஜூன் 27-ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

வைகோ

பொதுக்குழுவில் உள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே, தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப இறுதி முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக 4 இடங்களைப் பெற்று, அதில் 2 தொகுதிகளில் (சீர்காழி மற்றும் கடையநல்லூர்) வெற்றி பெற்றது. இந்த இரண்டு வேட்பாளர்களும் திமுக-வின் 'உதயசூரியன்' சின்னத்திலேயே போட்டியிட்டு வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நிலவும் அரசியல் மாற்றங்களுக்கு இடையே, மதிமுக தனது கூட்டணியை மாற்ற முற்படும் போது சட்ட ரீதியான சிக்கல்களோ அல்லது திமுக தரப்பில் இருந்து அரசியல் அழுத்தங்களோ கொடுக்கப்பட்டால், அதற்குத் தீர்வாகத் தங்களது 2 சட்டமன்ற உறுப்பினர்களையும் பதவியை ராஜினாமா செய்ய வைக்கவும் கட்சித் தலைமை ஒரு மாற்றுத் திட்டத்தை (Plan B) ஆலோசித்து வருவதாகத் தலைமைச் செயலக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியுள்ள நிலையில், வரும் ஜூன் 27 அன்று நடைபெறவுள்ள மதிமுக பொதுக்குழுவின் முடிவுகள் தமிழக அரசியலில் மற்றுமொரு முக்கியத் திருப்பமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.