மதிமுக பகுதிச் செயலாளர், மகன் உட்பட 3 பேர் கைது; 5 கிலோ கஞ்சா பறிமுதல்!
சென்னை ஆர்.கே. நகர் பகுதியில் சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பகுதிச் செயலாளர், அவரது மகன் உட்பட 3 பேரை எம்பிசிடி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நிர்வாகியைக் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கி மதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை வடசென்னை பகுதியில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கும் பொருட்டு, ஆர்.கே. நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை அம்பலமானது.
இச்சம்பவம் தொடர்பாக ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த மதிமுக பகுதிச் செயலாளர் பாபா ஜெகன் (52), அவரது மகன் விஷ்ணு பிரியன் (20) மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த கீதா (37) ஆகிய 3 பேரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மதிமுகவின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவரே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தத் தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அறிவுறுத்தலின்படி தலைமைக் கழகம் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, கட்சியின் நற்பெயருக்குக் களம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், ஆர்.கே. நகர் பகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் பாபா ஜெகன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பாபா ஜெகன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள ஆர்.கே. நகர் போலிசார், இவர்களுக்குப் பின்னணியில் இருக்கும் கஞ்சா மொத்த வியாபாரிகள் யார் என்பது குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
