அசைவப் பிரியர்களே உஷார்... ஊசி மூலம் தண்ணீர் ஏற்றி 1200 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்!
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் 57 வயதான மோயிசன் என்பவர், தனது பெயரிலேயே ஒரு மட்டன் கடை நடத்தி வருகிறார். இந்த குறிப்பிட்ட கடையில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் கெட்டுப்போன ஆடு மற்றும் கோழி இறைச்சிகள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த இரகசியத் தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சிவராம பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் அந்த கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதிகாரிகள் நடத்திய இந்த அதிரடி சோதனையில், கூடுதல் லாபத்திற்காக ஊசி மூலம் கறிக்குள் தண்ணீர் நிரப்பி ஆட்டுக்கறி மற்றும் கோழி இறைச்சியை விற்று வந்தது கையும் களவுமாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடையை உடனடியாகப் பூட்டி சீல் வைத்த அதிகாரிகள், விதிமுறைகளை மீறியதற்காக மோயிசனுக்கு ரூ.13,000 அபராதம் விதித்து அதிரடி உத்தரவிட்டனர். மேலும் கறிக்குள் தண்ணீர் செலுத்தப் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் அத்தனையையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை அடுத்தகட்டப் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பொதுமக்களின் உயிருடன் விளையாடும் இத்தகைய கலப்படம் மற்றும் முறைகேடான இறைச்சி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மதுரையின் முக்கியப் பகுதியில் கறிக்குள் தண்ணீர் ஏற்றி விற்ற கடைக்குச் சீல் வைக்கப்பட்ட இந்த விபரீதச் சம்பவம் ஒட்டுமொத்த அசைவப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
