முதல்வரின் திருச்சி கூட்டத்திற்கு ஊடகங்களுக்குத் தடை; பிரதமர் நிகழ்வுகளில் கூட இல்லாத கட்டுப்பாடு!

 
விஜய் விஜய்

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி செலுத்துவதற்காகத் தமிழக முதல்வர் விஜய் இன்று திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்துகிறார்.

இந்த அரசு மற்றும் கட்சி சார்ந்த பொதுக்கூட்டத்தில், செய்தியாளர்களைப் பொதுமக்களிடம் இருந்து முற்றிலும் தனிமைப்படுத்தும் வகையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் ஊடக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 

பொதுவாக முதலமைச்சர் அல்லது பிரதமர் போன்ற மிக முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்களில், மேடைக்கு முன்பாகவோ அல்லது குறிப்பிட்ட தூரத்திலோ ஊடகவியலாளர்கள் செய்திகளைச் சேகரிக்கவும், படம்பிடிக்கவும் தனிப் பகுதிகள் ஒதுக்கப்படுவது வழக்கமான நடைமுறையாகும்.

விஜய் எம்.எல்.ஏ. தவெக

ஆனால், திருச்சியில் இன்று நடைபெறும் முதல்வரின் நன்றி அறிவிப்புக் கூட்டத்தில், பொதுமக்களையும் செய்தியாளர்களையும் முற்றிலும் பிரிக்கும் வகையில், ஊடகங்களுக்கெனத் தனியாக ஒரு மூடிய அறை போன்ற இரும்புத் தடுப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஏற்பாடானது செய்தியாளர்கள் சுதந்திரமாக நடமாடிப் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்பதையோ அல்லது நிகழ்வைச் சரியாகப் படம்பிடிப்பதையோ முடக்கும் வகையில், மறைமுகத் தடை விதிப்பது போல அமைந்துள்ளதாக விழா இடத்திலிருந்த ஊடகவியலாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நாட்டின் பிரதமரின் பாதுகாப்புப் புரோட்டோகாலில் கூட இத்தகைய இறுக்கமான கட்டுப்பாடுகள் இருப்பதில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முதல்வர் கான்வாய் போக்குவரத்து விஜய் கார்

முதல்வரின் வருகையையொட்டித் திருச்சி மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ள சூழலில், இந்த அசாதாரண ஊடகக் கட்டுப்பாடு பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.  முதலமைச்சரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காவல் துறை அதிகாரிகளாக எடுத்த முடிவா இது, அல்லது தவெக கட்சியின் உள்ளூர் முக்கிய நிர்வாகிகளே திட்டமிட்டுச் செய்த ஏற்பாடா என்ற விபரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒருதரப்பினர் கூறினாலும், இது ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் எனப் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.