திக் திக் கார் பயணம்... டிரைவர் இல்லாத டாக்ஸியில் நடிகை மீனா சவாரி!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான மீனா, டிரைவர் இல்லாமல் தானாகவே இயங்கும் 'ஏஐ' தொழில்நுட்ப கார் ஒன்றில் பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது அமெரிக்காவிற்குச் சுற்றுலா சென்றுள்ள அவர், அங்குள்ள கலிபோர்னியாவில் இந்தத் த்ரில்லான அனுபவத்தைப் பெற்றுள்ளார். தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைத்து இயற்கையை ரசிப்பதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "ஹாய், என் டிரைவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தட்டுமா?" என்று கேட்டுவிட்டு, காலியாக இருக்கும் டிரைவர் இருக்கையை மீனா காட்டுகிறார். டிரைவர் இல்லாமலேயே ஸ்டீயரிங் தானாகவே திரும்புவதைக் கண்டு அவர் வியப்படைவதோடு, இதனை "டிரைவர் இல்லாத டாக்ஸி" என்றும் அறிமுகப்படுத்துகிறார். கூகுள் நிறுவனத்தின் 'வேமோ' (Waymo) எனப்படும் இந்தத் தொழில்நுட்ப கார் பயணம் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை மீனா நடித்துள்ள 'திரிஷ்யம் 3' திரைப்படம் வரும் மே 21-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த வீடியோ அவரது ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்து வருகிறது. பல நாடுகளில் புழக்கத்தில் உள்ள இந்தத் தானியங்கி கார் வசதி தற்போது இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மீனாவின் இந்தத் தைரியமான பயணத்தைப் பாராட்டி வரும் ரசிகர்கள், அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
