பாம்பு கடித்ததாக நாடகமாடி கணவரைக் கொலை செய்த மனைவி! காதலனுடன் தூக்கு தண்டனை... பரபரப்பு தீர்ப்பு!

 
கொலை

 

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், கணவரைக் கொலை செய்துவிட்டு பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடிய மனைவி மற்றும் அவரது காதலனுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.

அக்பர்பூர் சதாத் கிராமத்தைச் சேர்ந்த அமித் காஷ்யப் என்பவருக்கும், அவரது மனைவி ரவிதாவுக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். அமித்தின் நண்பரான அமர்தீப்புடன் ரவிதாவுக்குத் தொடர்பு ஏற்பட்டதாகவும், இதை அமித் கண்டித்ததால் இருவரும் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அமித் தூங்கிய பிறகு வீட்டுக்கு வந்த அமர்தீப்புடன் சேர்ந்து ரவிதா அவரைக் கொலை செய்ததாக வழக்கு விசாரணையில் தெரியவந்தது. பின்னர், பாம்பு கடித்தது போலக் காட்டுவதற்காக உடலுக்கு அருகில் உயிருள்ள பாம்பு வைக்கப்பட்டது. ஆனால், பிரேதப் பரிசோதனையில் கழுத்து நெரிக்கப்பட்டதே மரணத்துக்குக் காரணம் என்பது தெரியவந்தது.பாம்பாட்டியின் சாட்சியம் மற்றும் செல்போன் அழைப்பு விவரங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்த மீரட் நீதிமன்றம், இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்தது.