"கர்நாடக முதல்வரைச் சந்திக்கும் முன் விவசாயிகளைச் சந்தியுங்கள்" - முதல்வர் விஜய்க்கு சிபிஐ அட்வைஸ்!
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை எக்காரணம் கொண்டும் விட்டுத்தரக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், "தமிழக முதலமைச்சர் விஜய்யின் பேச்சுவார்த்தை பின்னிருந்து ஆரம்பிக்கக் கூடாது. போராடிப் பெற்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடியொற்றி, அதனை உடனடியாக அமல்படுத்துமாறு கர்நாடக அரசிடம் வலியுறுத்த வேண்டும்."
"கர்நாடக முதலமைச்சரைச் நேரில் சந்தித்துப் பேசுவதற்கு முன்பாக, தமிழக முதல்வர் விஜய் இங்குள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளையும் கருத்துகளையும் நேரில் கேட்டறிய வேண்டும். கர்நாடக அரசு எப்போதும் சொன்னபடி நடந்துகொள்வதில்லை. காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே நேர்கோட்டில் உறுதியாக உள்ளன. இதில் தமிழக அரசு எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது."

பாலன் இல்லத்தில் நடைபெற்ற போராட்டம் குறித்துப் பேசிய அவர், "பாலன் இல்லத்தில் நடைபெற்றது கரப்பான் பூச்சி அமைப்பினரின் போராட்டம். இடதுசாரி மாணவர்கள் என்ற முறையில் நாங்கள் அதற்கு ஆதரவளித்து, எங்களது அலுவலகத்தை 6 நாட்கள் வழங்கினோம். அங்கு வந்து பேசுகிறவர்கள் சில நேரங்களில் தமிழக முதல்வரைக் கூட விமர்சிக்கிறார்கள். அது ஒரு ஜனநாயக மேடை என்பதால் அதைத் தடுக்க முடியாது. ஆனால், அந்தப் போராட்டத்தின் முதன்மை நோக்கம் ஒன்றிய அரசுக்கு எதிரானதுதானே தவிர, தமிழக முதல்வருக்கு எதிரானது அல்ல" என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
