மெகுல் சோக்சியின் வழக்கறிஞர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு! லண்டன் நீதிமன்றத்தில் புதிய திருப்பம்

 
மெகுல்

 

இந்தியாவில் பெரும் வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெகுல் சோக்சியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் மீது லண்டனில் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கெனவே குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் அவருக்கு எதிராக, தற்போது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புதிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரான விஜய் அகர்வால் (57), மெகுல் சோக்சி தொடர்பான வழக்குகளில் ஆஜராகியுள்ளார். லண்டனின் மேஃபேர் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவங்கள் கடந்த மே 26 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய தேதிகளில் நடந்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விஜய் அகர்வால் மீது நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 41 வயது உதவியாளர் மன்பிரீத் கவுர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அக்டோபர் 9-ம் தேதி லண்டனில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின்போது, விஜய் அகர்வால் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களைச் சுரண்டுவதற்காகப் பயணம் ஏற்பாடு செய்தல் அல்லது அதற்கு உதவுதல் தொடர்பான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஹரா திப்ரிவாலா என்பவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

How A Mayfair Landlord's Complaint Put Mehul Choksi's Lawyer Vijay Aggarwal On UK Radar | Exclusive | World News - News18

விஜய் அகர்வால் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கடந்த மாதம் நீதிபதி ஜான் மில்னே நிராகரித்தார். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் நவம்பர் 6-ம் தேதி தெற்கு லண்டன் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டியவை. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படக் கூடாது.