கோடிக்கோடியாய் பணமிருந்தும் மகளுக்கு தர மறுத்த மெலிண்டா பில்கேட்ஸ்!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸின் முன்னாள் மனைவியும், உலகின் பெரும் பணக்காரப் பெண்மணிகளில் ஒருவருமான மெலிண்டா ஆன் பிரெஞ்ச் கேட்ஸ், தனது மகளின் புதிய தொழில் நிறுவனத்திற்காக நிதி உதவி வழங்க மறுத்துள்ளார். மெலிண்டா கேட்ஸ் தோராயமாக 34 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) சொத்துகளுக்குச் சொந்தக்காரராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மெலிண்டாவின் இளைய மகள் பீபி கேட்ஸ், தனது ஸ்டான்போர்டு பல்கலைக்கழக நண்பருடன் இணைந்து 'பியா' என்ற பேஷன் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்தத் தளம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வலைத்தளங்களில் உள்ள ஆடைகளின் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கப் பயன்படுகிறது.
இந்த நிறுவனத்தின் முதலீட்டிற்காகத் தனது தாயிடம் பீபி பணம் கேட்டபோது, மெலிண்டா அதனை வழங்க மறுத்துவிட்டார். "அது உண்மையான பிசினஸ் என்றால், பிற முதலீட்டாளர்கள் அதை ஆதரிக்க வேண்டும்; நான் பணம் தர மாட்டேன்" என்று அவர் கூறிவிட்டார்.

தனது மகள் எந்தவிதச் சலுகைகளும் இல்லாமல், நிராகரிப்பு மற்றும் சிரமங்களைச் சந்தித்துத் சுயமாக வளர வேண்டும் என்பதற்காகவே இந்தத் முடிவை எடுத்ததாக மெலிண்டா தெரிவித்துள்ளார். பில் கேட்ஸும் தனது குழந்தைகள் தமது சொத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே பெறுவார்கள் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
