பெங்களூருவில் உருக்கம்... சடலத்தைக் கட்டிப்பிடித்து அழுத குரங்கு - உணவளித்த மூதாட்டியின் மரணத்தால் சோகம்!
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம், சென்னப்பட்டணா தாலுகா பி.வி.ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பர்வதம்மா (80). இவர் விலங்குகள் மீது அதீத அன்பு கொண்டவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பர்வதம்மாவின் வீட்டிற்கு தற்செயலாக ஒரு குரங்கு வந்துள்ளது. அதற்கு அவர் உணவளித்ததை அடுத்து, அந்த குரங்கு தினமும் பர்வதம்மாவைக் காண வரத் தொடங்கியது.
தினமும் காலையில் வரும் அந்த குரங்கு, மூதாட்டியிடம் உணவு உண்டுவிட்டு, அவருடன் விளையாடி மகிழும். மாலையில் மட்டுமே அருகில் உள்ள வனப்பகுதிக்குச் செல்லும். இது அந்தப் பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாகப் பர்வதம்மா நேற்று காலமானார். வழக்கம் போல இன்று காலை மூதாட்டியைப் பார்க்க வந்த அந்த குரங்கு, அவர் அசைவற்று கிடப்பதைக் கண்டு நிலைகுலைந்து போனது.
மூதாட்டியின் உடலைச் சுற்றி வந்து சத்தமிட்ட குரங்கு, ஒருகட்டத்தில் அவரது உடலின் மீது அமர்ந்து, முகத்தை வருடியும், உடலைக் கட்டித் தழுவியும் தனது சோகத்தை வெளிப்படுத்தியது. இறுதிச் சடங்கிற்காக மூதாட்டியின் உடலை எடுத்துச் செல்லும் வரை, அந்தக் குரங்கு அங்கேயே அமர்ந்து அஞ்சலி செலுத்தியது.
மனிதர்களே மனிதர்களை மதிக்கத் தவறும் இந்த காலத்தில், ஒரு வாயில்லா ஜீவன் காட்டிய இந்த அன்பு, இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களைக் கண்கலங்க வைத்தது. பின்னர், அந்த குரங்கை அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர். "அம்மா சென்ற இடத்திற்குத் தானும் செல்வேன் என்பது போல அந்தக் குரங்கு அடம் பிடித்தது எங்களை உலுக்கிவிட்டது" என ஊர் மக்கள் தெரிவித்தனர்.
