45 வயதுக்குட்பட்ட ஆண்கள் வெளிநாடு செல்ல இனி 'மிலிட்டரி' அனுமதி கட்டாயம்! ஜெர்மனியில் அமலான புதிய விதி!
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய தனது அமைதிப் போக்கைக் கைவிட்டு, ஜெர்மனி தற்போது தனது பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்தவும் விரிவாக்கவும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டு ஆண்கள் வெளிநாடு செல்வதற்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ள 'ராணுவச் சேவை நவீனமயமாக்கல் சட்டத்தின்' கீழ் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: 17 முதல் 45 வயதுக்குட்பட்ட ஜெர்மன் ஆண்கள், மூன்று மாதங்களுக்கும் மேலாக வெளிநாட்டில் தங்குவதற்குத் திட்டமிட்டால், ஜெர்மன் ராணுவத்தின் முறையான அனுமதியைப் பெற வேண்டும்.
கல்வி, வேலைவாய்ப்பு அல்லது நீண்ட காலச் சுற்றுலா என எந்தக் காரணத்திற்காக வெளிநாடு சென்றாலும் இந்த விதிமுறை பொருந்தும். முன்பு போர் அல்லது அவசரக் காலங்களில் மட்டுமே இருந்த இந்த நடைமுறை, இனி சாதாரண காலங்களிலும் நிரந்தரமாகப் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 1.84 லட்சமாக உள்ள ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 2035-க்குள் 2.70 லட்சமாக உயர்த்த ஜெர்மனி இலக்கு நிர்ணயித்துள்ளது. அவசரக் காலங்களில் யாரையெல்லாம் ராணுவப் பணிக்கு அழைக்க முடியும் என்பதைத் துல்லியமாகக் கண்காணிப்பதற்காக இந்த 'வாக்காளர் பதிவு' போன்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகள் தங்கள் தற்காப்புத் திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

2026-ல் இருந்து 18 வயதை எட்டும் அனைத்து இளைஞர்களும் ராணுவச் சேவையில் சேர விருப்பம் உள்ளதா என்பது குறித்த கேள்வித்தாளை நிரப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இது விருப்பத்தின் பேரில் மட்டுமே இருக்கும். இந்தச் சட்டம் தனிமனித சுதந்திரத்தைப் பாதிப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தாலும், நாட்டின் பாதுகாப்பே தங்களுக்கு முதன்மையானது என ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
