மன உளைச்சல்... தம்பதியினர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் மீட்பு!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அம்மாடம் பகுதியில், உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தம்பதியினர் தங்களது வீட்டின் மொட்டை மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
திருச்சூர் வல்லச்சிரா பகுதியைச் சேர்ந்த சத்யன் (66) மற்றும் அவரது மனைவி குமாரி (59) ஆகியோர், அம்மாடம் புத்தன்வழி பள்ளிப்பெரும் வீதியில் உள்ள தங்கள் இல்லத்தின் மொட்டை மாடியில் சனிக்கிழமை அதிகாலை 3:00 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். சோட்டானிக்கரா கோயிலுக்குச் சென்றுவிட்டு அதிகாலை வீடு திரும்பிய தம்பதியினரின் மகனும் மருமகளும் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
உயிரிழந்த சத்யன் சில காலமாகப் பக்கவாத (Paralysis) நோய்க்கான சிகிச்சைப் பெற்று வந்துள்ளதாகவும், அவரது மனைவி குமாரி தீவிரச் சிறுநீரகக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தங்களுக்கு நீண்ட காலமாகத் தொடர்ந்து வந்த உடல்நலக் குறைவு மற்றும் அதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாகவே தம்பதியினர் இந்த விபரீத முடிவைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று காவல்துறையினர் முதற்கட்டமாகச் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
