கப்பல் அதிகாரியை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுக்கு தூக்குத்தண்டனை... பரபரப்பு தீர்ப்பு!

 
உபி

 

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், வணிகக் கப்பல் அதிகாரியான கணவரைக் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி நீல நிற டிரம்மில் அடைத்து வைத்த மனைவி மற்றும் அவரது காதலனுக்கு நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்துள்ளது.

கணவரைக் கொலை செய்து டிரம்மில் அடைத்தனர்

மீரட்டைச் சேர்ந்தவர் சவுரப் ராஜ்புத். இவர் வணிகக் கப்பல் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி, சகில் சுக்லா என்பவருடன் காதலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு சவுரப் எதிர்ப்பு தெரிவித்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முஸ்கானும் சகிலும் இணைந்து சவுராப்பைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, கடந்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி இருவரும் சேர்ந்து சவுராப்பைக் கொலை செய்தனர். பின்னர் அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி, நீல நிற டிரம்மில் அடைத்து சிமெண்டு போட்டு மூடியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

13 மாத விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு

இந்த வழக்கில் முஸ்கான் மற்றும் சகில் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மீரட் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் 22 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சுமார் 13 மாதங்கள் நடைபெற்ற விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த செப்டம்பர் 30-ம் தேதி இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதைத்தொடர்ந்து, தண்டனை தொடர்பான விசாரணைகள் முடிந்த நிலையில், நீதிபதி அரவிந்த் குமார் மிஸ்ரா இருவருக்கும் தூக்குத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். கப்பல் அதிகாரி கொலை வழக்கில் மனைவிக்கும் அவரது காதலனுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.