இனி தப்ப முடியாது! குழந்தைகள் பாலியல் குற்றங்கள் குறித்து Meta முக்கிய முடிவு!

 
மெட்டா

 

குழந்தைகளை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் சட்டவிரோத உள்ளடக்கங்கள் தொடர்பான விவகாரங்களில், இந்தியாவில் இனி சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க அமைப்புகளிடம் நேரடியாக தகவல் அளிக்க Meta ஒப்புக்கொண்டுள்ளது. இதனை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 Facebook, Instagram, WhatsApp உள்ளிட்ட தளங்களை நடத்தும் Meta நிறுவனம், குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான சம்பவங்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை உரிய இந்திய சட்ட அமலாக்க அமைப்புகளிடம் தெரிவிக்க ஒப்புக்கொண்டுள்ளது.இதன் மூலம் குழந்தைகளை குறிவைத்து சட்டவிரோதமான பாலியல் உள்ளடக்கங்களை உருவாக்குவது, பகிர்வது அல்லது பரப்புவது தொடர்பான வழக்குகளில் விசாரணை அமைப்புகளுக்கு கூடுதல் தகவல்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்களை சமூக வலைத்தளங்களில் கட்டுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சட்டவிரோத மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை விரைவாக அகற்றுவதற்கான விதிமுறைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.சமீபத்தில் Instagramல் குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான விளம்பரங்கள் இடம்பெற்றதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, NCPCR சார்பிலும் Meta-விடம் விசாரணை நடத்தப்பட்டது.

Meta ஏற்கனவே குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்களை கண்டறிந்து அகற்றவும், உரிய சட்ட நடைமுறைகளின்படி புகார் அளிக்கவும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.தற்போதைய புதிய ஒப்புதலின் மூலம், இந்திய சட்ட அமலாக்க அமைப்புகளுடன் ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன் குற்றங்களை கட்டுப்படுத்த இது முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.