கேரள முதல்வர் நடனமாடும் ஏஐ வீடியோவை நீக்கியது மெட்டா நிறுவனம்!

 
கேரள முதல்வர் வி.டி. சதீசன் ஏஐ

கேரள முதல்வர் வி.டி. சதீசன் மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து நடனமாடுவது போன்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி காணொளி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதனை மெட்டா நிறுவனம் நீக்கியுள்ளது.

கேரள மாநில மின்வாரிய ஊழியர்களுடன் முதல்வர் வி.டி. சதீசன் உற்சாகமாக நடனமாடுவது போல உருவாக்கப்பட்ட அந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது. திருச்சூரைச் சேர்ந்த 'ரீச் யூ டாட்' நிறுவனத்தின் 'ஏஐ காவாலா' சமூக வலைதளப் பக்கத்தில்தான் இந்த ஏஐ காணொளி உருவாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

கேரள முதல்வர் சதீசன்

வந்த புகார்களின் அடிப்படையில் இந்தியாவில் அந்த ஏஐ காணொளி நீக்கப்பட்டதாக மெட்டா நிறுவனத்திடம் இருந்து முறைப்படி தகவல் வந்ததாக அதன் உரிமையாளர் அபிஜித் கே.எஸ். உறுதிப்படுத்தினார். இருப்பினும், இந்த நீக்க நடவடிக்கைக்கு எதிராகத் தான் எந்தவொரு புகாரும் அளிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்துப் பேசிய முதல்வர் வி.டி. சதீசன், அந்த காணொளியைத் தான் பார்த்ததாகவும், நடிகர் மோகன்லால் மற்றும் தனது நண்பரான தமிழக முதல்வர் விஜய்யை விடத் தான் அதில் சிறப்பாக நடனமாடியிருப்பதைப் பார்த்துத் திகைத்துப் போனதாகவும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். மேலும், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் எதையும் செய்ய முடிகிற சூழலில், இதுபோன்ற படைப்புகளின் சட்டரீதியான தாக்கங்கள் குறித்தும் தற்போதைய சட்டக் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் முக்கியக் கேள்விகளை எழுப்பினார்.