கேரள முதலமைச்சர் முகநூல் பதிவுகள் நீக்கம்: மெட்டா நிறுவனத்திற்கு எதிராக அரசு கடும் கண்டனம்!

 
kerala

கேரள முதலமைச்சர் வி.டி. சதேசனின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கமான 'சி.எம்.ஓ. கேரளம்' பக்கத்தில் இருந்து இரண்டு முக்கியமான பதிவுகள் திடீரென நீக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உரிய விளக்கம் கோரி முதலமைச்சர் அலுவலகம் மெட்டா நிறுவனத்திற்கும் மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கும் அதிகாரப்பூர்வமாகக் கடிதம் அனுப்பியுள்ளது.

ஆஷா பணியாளர்களுக்கு ஓணம் திருவிழா ஊக்கத்தொகை அறிவிப்பு மற்றும் நபி தின வாழ்த்துகள் போன்ற இரண்டு பதிவுகளே முகநூல் தளத்திலிருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மாயமாகின. நீக்கப்பட்ட அந்தப் பதிவுகளை உடனடியாக மீண்டும் பதிவேற்ற வேண்டும் என்றும், தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளின்படி எந்தக் காரணத்திற்காக உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டன என்பதை மெட்டா நிறுவனம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கடித்தத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வத் தகவல்தொடர்பு பக்கங்களில் இதுபோன்ற தன்னிச்சையான நடவடிக்கைகளில் சமூக வலைத்தள நிறுவனங்கள் ஈடுபடுவதைத் தடுத்து உரிய பாதுகாப்பை வழங்குமாறு மத்திய ஐ.டி. அமைச்சகத்தையும் முதலமைச்சரின் செயலர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே, அரசு தரப்பில் விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து நீக்கப்பட்ட பதிவுகள் பின்னர் மீண்டும் மெட்டா நிறுவனத்தால் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன.