இளம் வயதினரைப் பாதுகாக்க மெட்டா ஏ.ஐ-யின் புதிய அம்சம் - பெற்றோருக்கு எச்சரிக்கை!

 
மெட்டா

டீன்-ஏஜ் வயதினரின் மனநலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மெட்டா நிறுவனம் தனது மெட்டா ஏ.ஐ (Meta AI) செயலியில் ஒரு புதிய மற்றும் புரட்சிகரமான பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

டீன்-ஏஜ் வயதினர் மெட்டா ஏ.ஐ-யுடன் உரையாடும்போது, தற்கொலை, சுய தீங்கு அல்லது உயிருக்கு ஆபத்தான மனநிலை குறித்த தகவல்களைப் பகிர்ந்தால், அதனை ஏ.ஐ கண்டறிந்து உடனடியாக அவர்களின் பெற்றோருக்கு எச்சரிக்கைச் செய்தி அனுப்பும்.

ஒரு பயனரின் உயிருக்கு உடனடி ஆபத்து இருப்பதாக ஏ.ஐ கணித்தால், உடனடியாக உள்ளூர் அவசரகால உதவி அமைப்புகளுக்கும் தகவல் தெரிவிக்கும் தொழில்நுப்ட வசதியை மெட்டா மேம்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இத்தகைய 19,000-க்கும் மேற்பட்ட சம்பவங்களில் அவசர உதவி அமைப்புகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மெட்டா

டீன்-ஏஜ் பயனர்களின் கணக்குகளில் '13 பிளஸ்' பாதுகாப்பு அமைப்பு இயல்பாகவே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது: இதன் மூலம், வயதுக்கு ஒவ்வாத அல்லது மனநலத்தைப் பாதிக்கக்கூடிய உணர்வுபூர்வமான கேள்விகளுக்கு மெட்டா ஏ.ஐ பதிலளிக்காது. டீன்-ஏஜ் வயதினருக்குப் பாதுகாப்பான, அவர்களின் வயதுக்கு ஏற்ற பதில்களை மட்டுமே ஏ.ஐ வழங்கும்.

முன்னதாக, இத்தகைய இக்கட்டான சூழல்களில் மனநல ஆலோசகர்கள் அல்லது உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு மட்டுமே ஏ.ஐ பரிந்துரைத்து வந்தது. ஆனால், தற்போது அறிமுகமாகியுள்ள இந்த நேரடி எச்சரிக்கை வசதி முதற்கட்டமாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இச்சேவை இந்தியா உட்பட உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. மெட்டாவின் இந்த நடவடிக்கை டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.