சிவன் கோவிலுக்குள் சிறுமிக்கு பாலியல் தொல்லை - மெட்ரோ தொழிலாளி கைது!
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள சிவன் கோவில் வளாகத்தில் வைத்துச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். வழிபாட்டுத் தலத்திற்குள் நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
புனே மாவட்டம் பிம்ப்ரி சிஞ்ச்வாட் அருகிலுள்ள நிக்டி பகுதியில் புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அந்தத் கோவிலுக்குத் தனியாகச் சென்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது கோவிலுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வழிபாடு நடத்திக் கொண்டிருந்த அந்தச் சிறுமிக்குத் திடீரெனப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாதுகாப்பானதாகக் கருதப்படும் வழிபாட்டுத் தலத்திலேயே சிறுமிக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பரவி வைரலானதுடன், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் கண்டனங்களைப் பெற்றது. காணொளியின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கோவிலுக்குள் அத்துமீறிச் சிறுமிக்குத் தொல்லை கொடுத்த நபரைத் தேடி வந்தனர்.

விசாரணையில், கைதான நபர் அப்பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் வெளிமாநிலத் தொழிலாளியாக வேலை செய்து வருவது தெரியவந்தது. இதனையடுத்து, துரிதமாகச் செயல்பட்ட காவல்துறையினர் அந்த நபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். புனிதமான கோவிலுக்குள் சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபர் சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
