உலக அளவில் முதலிடம்: சென்னை மெட்ரோவிற்குச் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது!

 
metro train metro train

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு விருதுகள் நிகழ்வில், சிறந்த சுற்றுச்சூழல் தலைமைத்துவமிக்க திட்டத்திற்கான விருதினை வென்றுள்ளது. போக்குவரத்துத் துறையில் மெட்ரோ ரயில் பிரிவின்கீழ் சென்னை மெட்ரோ செய்துள்ள அரிய சாதனைகளைப் பாராட்டி இந்த உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. வரும் மே 22 ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறவுள்ள உலகளாவிய எரிசக்தித் தலைவர்கள் உச்சி மாநாட்டில் இந்த விருது அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட உள்ளது.

metro

மெட்ரோ ரயில் திட்டமிடல், கட்டுமானம் மற்றும் அதனை இயக்கும் முறைகளில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. பசுமைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக வழித்தடங்களை மாற்றியமைத்தது மற்றும் கட்டுமானங்களில் நவீனப் பசுமை வடிவமைப்பு முறைகளைப் புகுத்தியதில் சென்னை மெட்ரோ முன்னோடியாகத் திகழ்கிறது. ஒரு மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் எவ்வாறு இயற்கை வளங்களைப் பாதுகாப்பதோடு மரக்கன்றுகள் நடுவதிலும் தீவிரம் காட்ட முடியும் என்பதை இது நிரூபித்துக் காட்டியுள்ளது.

delhi metro

சென்னையைப் பசுமையாகவும் வலிமையாகவும் மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையில் மெட்ரோ நிர்வாகம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது. காலநிலை மாற்றத்திற்குத் தகுந்தாற்போல் கட்டுமானங்களை அமைப்பதிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சர்வதேச அளவில் சென்னை மெட்ரோ கவனம் ஈர்த்துள்ளது. இந்த உலகளாவிய அங்கீகாரம் நிலையான போக்குவரத்து சேவையை வழங்குவதில் சென்னை மெட்ரோவிற்கு மேலும் ஒரு மகுடமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.