செம... வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் ... ஜூலை மாதத்தில் பிரதமர் மோடி திறந்து வைப்பு!

 
மெட்ரோ ரயில்

சென்னை வடபழனி முதல் பூந்தமல்லி இடையிலான 14.6 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய அதிநவீன மெட்ரோ ரயில் வழித்தடத்தை ஜூலை மாதம் 2ம் அல்லது 3 ம் வாரத்தில் இந்தியப் பிரதமர்   மோடி முறைப்படி திறந்து வைப்பார் எனப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்து 4 மாதங்கள் கடந்துவிட்டன. இந்த நிலையில், எப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்கிற எதிர்பார்ப்பு தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது.

மெட்ரோ

இந்த புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் பூந்தமல்லியிலிருந்து வடபழனி வரை பயணம் செய்ய ஆகும் நேரம் 90 நிமிடங்களில் இருந்து வெறும் 30 நிமிடங்களாக மிகக் கணிசமாகக் குறையும்.இது சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும் என்பதுடன், வடபழனியில் உள்ள தற்போதைய பச்சை வழித்தடத்துடன் அதாவது சென்ட்ரல் முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான பாதையுடன் இணைக்கப்படும். இந்த புதிய வழித்தடத்தில் பயணிக்கும் ரயில்கள் பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், கரையான்சாவடி, குமணன்சாவடி ஆகிய 5 முக்கிய நிலையங்களில் நின்று செல்லும். அதனைத் தொடர்ந்து காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் பைபாஸ் மற்றும் போரூர் சந்திப்பு ஆகிய இதர 5 நிலையங்கள் உட்பட மொத்தம் 10 நிறுத்தங்களில் நின்று செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த ரயில் பாதை பணிகளின் காரணமாகக் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வந்த அந்த பகுதி ஏழை எளிய மக்களுக்கு, இந்த புதிய வழித்தடத் திறப்பு விழா செய்தி தற்போதைய சூழலில் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்த விரைவுப் போக்குவரத்தின் மூலம் மேற்கு சென்னை பகுதிகள் நகரின் மையப்பகுதியுடன் மிக எளிதாக இணைக்கப்பட்டு வணிக வளர்ச்சியும் வேகமெடுக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்