மேட்டூர் அணையில் முழுமையாகத் தெரியும் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை! சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்

 
மேட்டூர்

 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், நீர்த்தேக்கப் பகுதியில் மூழ்கியிருந்த பழமையான ஜலகண்டேஸ்வரர் கோவிலின் நந்தி சிலை தற்போது அதன் பீடம் வரை முழுமையாகக் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சேலம் மாவட்டம் பண்ணவாடி பரிசல் துறை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை கட்டப்பட்டபோது நீர்த்தேக்கப் பகுதியில் இருந்த கிராம மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அப்போது அவர்கள் வழிபட்டு வந்த ஜலகண்டேஸ்வரர் கோவில், கிறிஸ்தவ தேவாலயம் உள்ளிட்ட பழமையான கட்டிடங்கள் நீர்த்தேக்கப் பகுதியில் அப்படியே விடப்பட்டன. அணையில் நீர்மட்டம் குறையும்போது மட்டுமே இந்தக் கட்டிடங்களும் சிலைகளும் வெளியே தெரியத் தொடங்கும்.

ஒரே நாளில் இத்தனை உயரமா? வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை!!

60 அடிக்குக் கீழே சரிந்த நீர்மட்டம்

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68 அடிக்குக் கீழே சென்றபோது நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியது. இந்நிலையில், அணையின் நீர்மட்டம் 60 அடிக்குக் கீழே சரிந்ததால், நந்தி சிலை அமைந்துள்ள பீடம் வரை முழுமையாகக் காட்சியளிக்கிறது. ஜலகண்டேஸ்வரர் கோவிலின் கோபுரமும் தண்ணீருக்கு மேலே தெரியத் தொடங்கியுள்ளது.

மேட்டூர்

மேலும், சேத்துக்குழி பகுதியில் உள்ள பழமையான கிறிஸ்தவ தேவாலயத்தின் ஒற்றைக் கோபுரமும் நீர்மட்டம் குறைந்ததால் வெளியே தெரிகிறது. இதுபோன்ற காலங்களில் சுற்றுலாப் பயணிகள் பரிசல்களில் சென்று இந்தப் பழமையான சின்னங்களைப் பார்வையிடுவது வழக்கம். தற்போது அவை மீண்டும் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளதால், பண்ணவாடி பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.