திரைக்கு வந்த ஜாக்சனின் 'மைக்கேல்' - மீண்டும் வெடித்த பாலியல் புகார் சர்ச்சை!
உலகப் புகழ்பெற்ற மறைந்த பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான 'மைக்கேல்' (Michael) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடி வரும் நிலையில், அவர் மீது மீண்டும் எழுந்துள்ள பழைய பாலியல் வன்கொடுமைப் புகார்கள் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைக்கேல் ஜாக்சனுக்கு மிகவும் நெருக்கமான "இரண்டாவது குடும்பம்" என்று அறியப்பட்ட காசியோ (Cascio) குடும்பத்தினர் இந்தப் புகாரைத் தெரிவித்துள்ளனர். ஜாக்சன் தங்களைக் குழந்தைகளாக இருந்தபோது பல ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மது மற்றும் போதைப் பொருட்களைக் கொடுத்துத் தவறாக நடந்துகொண்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஜாக்சன் தரப்பு வழக்கறிஞர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாக்சனின் நேர்மைக்குச் சாட்சியாக இருந்தவர்கள், இப்போது கோடிக்கணக்கான டாலர்களைக் குறிவைத்துத் திட்டமிட்டுப் பொய் கூறுகின்றனர் என்று ஜாக்சன் சொத்து நிர்வாகத்தின் வழக்கறிஞர் மார்ட்டி சிங்கர் தெரிவித்துள்ளார். ஜாக்சனின் பயோபிக் வெளியாகியுள்ள அதே வேளையில், மீண்டும் கிளம்பியுள்ள இந்த சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
