84 நாட்களுக்கு மறையாத சூரியன்... அலாஸ்காவில் தொடங்கிய ‘மிட்நைட் சன்’ அதிசயம்!
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள உட்கியாக்விக் (Utqiagvik) நகரத்தில் ‘மிட்நைட் சன்’ எனப்படும் அபூர்வ இயற்கை நிகழ்வு தற்போது தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, அந்த நகரத்தில் அடுத்த 84 நாட்களுக்கு, அதாவது வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை சூரியன் மறையவே செய்யாது. இதனால் அங்கு இரவு நேரமே இல்லாமல், நாள் முழுவதும் வெளிச்சம் நிறைந்த பகல் பொழுதாகவே நீடிக்கப் போகிறது. பூமியின் துருவச் சாய்வு காரணமாக ஏற்படும் இந்த வியக்கத்தக்க நிகழ்வை உலகமே ஆச்சரியத்துடன் கவனித்து வருகிறது.
கோடைக்காலம் முழுவதும் தொடர்ச்சியான பகல் நிலவும் இந்த அதிசய காலப்பகுதியில், நள்ளிரவிலும் சூரியன் வானத்தில் பிரகாசிப்பதைக் காணலாம். புவியியல் அமைப்பின்படி வடதுருவத்திற்கு அருகில் இந்த நகரம் அமைந்துள்ளதால், கோடைக்காலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சூரியன் அடிவானத்திற்கு கீழே செல்வதில்லை. இதனால் அங்குள்ள மக்கள் தங்களது அன்றாடப் பணிகளை நேர வித்தியாசம் பாராமல் எந்நேரமும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த இயற்கை மாற்றத்தை அனுபவிக்கப் பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அங்கு குவியத் தொடங்கியுள்ளனர்.

இந்த நகரம் கோடைக்காலத்தில் மட்டும் இன்றி, குளிர்காலத்திலும் ஒரு மாறுபட்ட இயற்கை நிகழ்வைச் சந்திக்கிறது. குளிர்காலத்தில் சுமார் 65 நாட்கள் சூரிய ஒளியே இல்லாமல் முற்றிலும் இருள் சூழ்ந்த ‘போலர் நைட்’ எனப்படும் காலத்தையும் இந்த உட்கியாக்விக் மக்கள் அனுபவிக்கின்றனர். அதாவது, ஆண்டு முழுவதும் ஒருபுறம் தொடர் பகலும், மறுபுறம் தொடர் இரவும் என இந்த நகரம் இயற்கையின் ஒரு விந்தையான விளையாட்டு மைதானமாகவே திகழ்கிறது.
