மிலாடி நபி திருநாள்.. கோவையில் 2,000 கிலோ அரிசியில் நெய் சோறு தயாரித்து 20,000 பேருக்கு அன்னதானம்!
இஸ்லாமியர்களின் இறைதூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிலாடி நபி திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைப் பண்பை விளக்கும் வகையில் பல்வேறு இடங்களில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
கோயம்புத்தூர் உக்கடம், ஜி.எம். நகர் பகுதியில் சுன்னத் ஜமாத் சார்பில் 11-வது ஆண்டாக இலவச நெய் சோறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக 2,000 கிலோ அரிசியில் சுவையான நெய் சோறு சமைக்கப்பட்டு, 20,000க்கும் மேற்பட்டோர் உண்ணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று காலை முதலே ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக வரிசையில் நின்று உணவை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இப்பகுதி மக்கள் மட்டுமின்றிச் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து ஜாதி, மத பேதமின்றி நெய் சோற்றை வாங்கிச் சென்றது சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
இதேபோல், வேலூர் சார்பனாமேடு பகுதியிலும் மிலாடி நபியை முன்னிட்டு 1,000 கிலோ அரிசியில் உணவு தயாரிக்கப்பட்டு, காலை முதல் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குச் சுடச் சுட அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இதுபோன்ற மக்கள் நலப் பணிகளில் இஸ்லாமிய அமைப்புகள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
