ஈரானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து - 4 பேர் பலி!

 
ஈரான் ஹெலிகாப்டர்

நேற்று காலை சுமார் 9:09 மணியளவில், ஈரானின் மையப்பகுதியான இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள தோர்சே என்ற நகரில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென காய்கறி சந்தையில் விழுந்து விபத்துக்குள்ளானது.  விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ஈரானிய ராணுவத்திற்குச் சொந்தமானதாகும். இது ஒரு வழக்கமான பயிற்சிப் பயணத்தில் ஈடுபட்டிருந்த போது, நடுவானில் ஏற்பட்ட 'தொழில்நுட்பக் கோளாறு' காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது.

ஹெலிகாப்டர் நேராகத் தோர்சே நகரில் உள்ள ஒரு மொத்த விற்பனை பழம் மற்றும் காய்கறிச் சந்தை வளாகத்திற்குள் விழுந்தது. அந்தச் சமயத்தில் சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. விழுந்த வேகத்தில் ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்ததில், அருகிலிருந்த கடைகள் மற்றும் பொருட்கள் சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் கர்னல் ஹமீத் சர்வசாத் - ஹெலிகாப்டர் விமானி, மேஜர் முஜ்தபா கியானி - துணை விமானி, சந்தையில் கடைகளில் வேலை பார்த்துக்கொண்டிருந்த இரண்டு வியாபாரிகள் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஈரானில் கடந்த ஒரு வாரத்தில் நடைபெறும் இரண்டாவது வான்வழி விபத்து இதுவாகும். இதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ஹமதான் மாகாணத்தில் F-4 போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

சர்வதேசத் தடைகள் காரணமாக, ஈரானிய ராணுவத்திடம் உள்ள பழைய அமெரிக்க மற்றும் ரஷ்ய தயாரிப்பு விமானங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்கள்  கிடைப்பதில் பெரும் சிரமம் நீடிக்கிறது. இதுவே இதுபோன்ற தொடர் விபத்துகளுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது எனப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.