துணை ராணுவ துப்பாக்கிச் சூட்டில் 27 பொதுமக்கள் பலி!

 
சூடான் சூடான்

சூடான் நாட்டில் ராணுவத்திற்கும் அங்குள்ள ஆர்எஸ்எப் எனப்படும் துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில், அங்குள்ள வடக்கத்திய கோர்டோபான் மாநிலத்தின் பாரா நகருக்கு மேற்கே அமைந்துள்ள அல்-முர்ரா என்ற பகுதியில் உள்ள சில கிராமங்களைக் குறிவைத்து மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ராணுவ நடமாட்டம் எதுவும் இல்லாத அமைதியான இந்தச் சாதாரண கிராமப் பகுதிகளில், இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான தியாகத் திருநாள் கொண்டாடப்பட்ட இரண்டாவது நாளில் இந்தத் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுதம் ஏதும் இல்லாத அப்பாவிப் பொதுமக்களைத் தங்களின் வீடுகளிலேயே வைத்து குறிவைத்து நடத்திய இந்தத் துப்பாக்கிச் சூட்டில், முதியவர்கள் உட்பட மொத்தம் 27 பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தத் துயரமான சம்பவம் குறித்து சூடான் மருத்துவர்கள் கூட்டமைப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச மனிதநேயச் சட்டங்களை முழுமையாக மீறி நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் கொடூரமான தாக்குதல் காரணமாக ஏற்கனவே அங்கு நிலவி வரும் மோசமான மனிதாபிமானச் சூழல் இன்னும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.