ஆக.24 முதல் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி நிறுத்தம் - ஆவின் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தல்!
பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்தக் கோரி, வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியை நிறுத்தப்போவதாகத் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.
கடந்த ஓராண்டில் மாட்டுத் தீவனம், பராமரிப்பு மற்றும் மருத்துவச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்வதற்குச் சராசரியாக ரூ.61 வரை செலவாகிறது. இவ்வளவு செலவு ஏற்படும் சூழலில், அரசு கூட்டுறவு நிறுவனமான ஆவின், ஒரு லிட்டர் பாலுக்கு வெறும் ரூ.38 மட்டுமே கொள்முதல் விலையாக வழங்குகிறது. அதே வேளையில், தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.42 முதல் ரூ.50 வரை கொள்முதல் விலை வழங்கிப் பாலைப் பெறுகின்றன.

ஆவின் நிர்வாகம் நிர்ணயித்துள்ள குறைந்த கொள்முதல் விலையாலும், கொழுப்புச் சத்து அளவைக் காரணம் காட்டி விலையைக் குறைப்பதாலும் பால் உற்பத்தியாளர்கள் தொடர் நிதி இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
பால் உற்பத்திச் செலவை அடிப்படையாகக் கொண்டு கொள்முதல் விலையை நிர்ணயிக்கச் சிறப்புக் குழு அமைக்க வேண்டும். பசும்பால் லிட்டருக்கு ரூ.45 ஆகவும், எருமைப் பால் லிட்டருக்கு ரூ.60 ஆகவும் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 24 முதல் மாநிலம் தழுவிய அளவில் பால் விநியோகம் மற்றும் உற்பத்தியை நிறுத்தும் போராட்டம் தீவிரமாக நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
