சபரிமலையில் 1.5 லட்சம் லிட்டர் கலப்பட நெய் விநியோகம் - மில்மா, தேவசம் வாரிய அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

 
நெய் சபரிமலை

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு 1.5 லட்சம் லிட்டருக்கும் அதிகமான கலப்பட நெய் விநியோகம் செய்யப்பட்ட விவகாரத்தில், 'மில்மா' நிறுவனமும், திருவிதாங்கூர் தேவசம் வாரிய உயர் அதிகாரிகளின் திட்டமிட்ட சதிசெயல் இருப்பதாகத் தேவசம் கண்காணிப்புப் பிரிவு தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேவசம் வாரியத்தின் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் இடைத்தரகராகச் செயல்பட்டு, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த நெய் விநியோக ஒப்பந்தத்தைப் பெற்றுத் தந்ததாகத் தெரியவந்துள்ளது.

சபரிமலை விஷூ கனி ஐயப்பன்

பம்பை சோதனைச் சாவடியில் வழக்கமாக நடைபெறும் தரப் பரிசோதனைகள் ஏதுமின்றி, கலப்பட நெய் நேரடியாகச் சன்னிதானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. சபரிமலைக்கு அனுப்ப வேண்டிய உயர் ரக மில்மா நெய்யை வேறு நபர்களுக்கு அதிக விலைக்கு விற்றுவிட்டு, அதற்குப் பதிலாகக் குறைந்த தரத்திலான போலி நெய்யைப் பொட்டலமிட்டு வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில் நெய் வழங்கியவர்களுக்கும், அதைப் பெற்றுக் கொண்ட தேவசம் வாரிய அதிகாரிகளுக்கும் கூட்டுப் பங்கு இருப்பதாகத் தெரிவித்த தேவசம் துறை அமைச்சர் கே.முரளீதரன், இதுகுறித்து விரிவாக விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேவசம் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். கலப்பட நெய் விநியோக முறைகேடு மற்றும் நிதி இழப்பு குறித்து முழுமையாக விசாரிக்க, இணை இயக்குநர் ஷீபா கமர் தலைமையில் 4 பேர் கொண்ட விசாரணைக் குழுவையும் கேரள அரசு அமைத்துள்ளது.