"பள்ளிகளுக்குள் ரீல்ஸ் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்!

 
அன்பில் மகேஷ்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குள் அரசியல் கட்சி நிர்வாகிகளை அனுப்பி, வகுப்பறைகளுக்குள் ரீல்ஸ் வீடியோக்கள் எடுப்பதையும், கட்சிப் பெயர்களைக் கூறி முழக்கமிடுவதையும் உடனடியாகத் தவிர்க்க வேண்டும் எனத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

பள்ளிகளில் தற்போது நிலவி வரும் புதிய நடைமுறைகள் மற்றும் அரசியல் தலையீடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலர், அரசுப் பள்ளிகளுக்குள் அத்துமீறி நுழைந்து தங்களது கட்சிப் பெயரையும், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் பெயரையும் சொல்லி வகுப்பறைகளுக்குள் மாணவர்களுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோக்கள் எடுப்பதும், அரசியல் முழக்கங்களை எழுப்பச் செய்வதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இத்தகைய தேவையற்ற அரசியல் அத்துமீறல்கள், பள்ளிகளில் அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் ஆசிரியப் பெருமக்களுக்குப் பெரும் தர்மசங்கடத்தையும், மன உளைச்சலையும் மட்டுமே ஏற்படுத்துகிறது.

"பள்ளி வளாகங்களுக்குள் நடத்தப்படும் இதுபோன்ற விளம்பர அரசியல் கூத்துகள், பிஞ்சு மாணவர்களிடையே தேவையற்ற கவனச் சிதறலை உருவாக்குமே தவிர, அவர்களின் அடுத்தகட்ட கல்வி முன்னேற்றத்திற்கோ அல்லது எதிர்கால வளர்ச்சிக்கோ எந்த வகையிலும் துளிகூடப் பயனளிக்கப் போவதில்லை. எனவே, கல்வியகங்களை அரசியல் களம் ஆக்குவதைத் தற்போதைய தவெக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்" என அன்பில் மகேஷ் விமர்சித்துள்ளார்.