அமைச்சர் கீர்த்தனாவுக்கு கழுத்தெலும்பு அறுவை சிகிச்சை!

 
கீர்த்தனா

 

தவெக அமைச்சர் கீர்த்தனா உடல்நலக் குறைவு காரணமாக முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தில் பங்கேற்கவில்லை என்ற தகவல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வரும் நிலையில், தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் விளக்கம் அளித்துள்ளார்.அமைச்சர் கீர்த்தனாவுக்கு கழுத்தெலும்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகவும் கனிமொழி சந்தோஷ் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் சுமார் 20 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியிருந்த நிலையில், கீர்த்தனா 4 நாட்களிலேயே பணிக்குத் திரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மருத்துவமனையில் இருந்தபோதும்கூட முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்துக்கான ஏற்பாடுகளை கீர்த்தனா ஒருங்கிணைத்ததாக கனிமொழி தெரிவித்துள்ளார். உடல்நிலை சரியில்லை என்பதற்கான காரணம் குறித்து சிலர் கேள்வி எழுப்பியபோது, அதனை மாதவிடாயுடன் தொடர்புபடுத்திய விமர்சனங்களையும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலே அதற்கு ஒரே காரணம் மாதவிடாய் என நினைப்பது சரியா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ள கனிமொழி, பெண்களின் உடல்நலப் பிரச்சினைகளை அவர்களின் மாதவிடாய் சுழற்சியுடன் மட்டும் தொடர்புபடுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகும் கீர்த்தனா வலி நிவாரண மருந்துகளை எடுத்துக்கொண்டு பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டதாகவும், நிறுவனங்களை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான பணிகளில் ஈடுபட்டதாகவும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.கீர்த்தனாவின் உடல்நிலை குறித்து தனிப்பட்ட தகவலை வெளியிட்டதற்காக அவரிடம் மன்னிப்பும் கோரியுள்ள கனிமொழி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஏன் இடம்பெறவில்லை என்பது தொடர்பாக எழுந்த கேள்விகளுக்கு இந்த பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.