எக்ஸ் தளத்தில் அமைச்சர் கீர்த்தனா விளக்கம்; முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு நேரடி கேள்வி!

 
கீர்த்தனா

சிவகாசி அரசுப் பள்ளியில் மாணவிகளிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய சர்ச்சை வீடியோ தொடர்பாகத் தவெக அரசின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் விரிவான விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தன் மீது விமர்சனங்களை முன்வைத்த எதிர்க்கட்சியினருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அவர் பல்வேறு நேரடி கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

சிவகாசி அரசுப் பள்ளி ஆய்வின் போது மாணவிகள் ஆங்கிலத்தில் பதிலளிக்கத் திணறிய வீடியோ இணையத்தில் வைரலாகி எதிர்க்கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளான நிலையில், அது குறித்து அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் தளத்தில் விளக்கமளித்திருக்கிறார். இணையத்தில் வைரலாகி வரும் அந்தச் சர்ச்சை வீடியோவை அமைச்சரின் தனிப்பட்ட குழுவோ அல்லது தவெக தரப்போ எடுக்கவில்லை என்றும், ஆய்வின் போது உடன் வந்திருந்த ஊடகங்கள் தான் அந்தத் தருணங்களைப் பதிவு செய்தன என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.


வீடியோவை யார் எடுத்தார்கள் என்பது முக்கியமல்ல என்றும், அரசுப் பள்ளிகளில் ஏன் இப்படிப்பட்ட அவலநிலை இன்னும் நீடிக்கிறது என்பதுதான் தற்போதைய உண்மையான கேள்வி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசுப் பள்ளிகளின் தற்போதைய நிலைக்கு முந்தைய திமுக ஆட்சியே காரணம் எனக் குற்றம் சாட்டிய அமைச்சர் கீர்த்தனா, முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நோக்கிப் பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், "இது ஒரு பள்ளியின் அவலநிலை மட்டுமல்ல; பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன என்பதற்கான சாட்சியம்! முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் நான் ஒரு நேரடியான கேள்வியைக் கேட்கிறேன்: கழிப்பறை இல்லை, உடற்கல்வி ஆசிரியர் இல்லை, கணினி ஆசிரியர் இல்லை, பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள் மண்டித் கிடக்கின்றன... இப்படிப்பட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாத அரசுப் பள்ளிகள் இருந்தபோது, உங்களுடைய முன்னுரிமை எங்கே இருந்தது?

இன்று இந்த நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, இந்த அவலநிலை ஏன் உருவானது என்பதற்கு மக்களுக்கு முதலில் பதில் சொல்லுங்கள்."

தான் சிவகாசி அரசுப் பள்ளிக்குச் சென்றது அரசியல் செய்வதற்காக அல்ல என்றும், அது தனது சொந்தத் தொகுதி என்பதால் அங்குள்ள மாணவர்களின் குரலைச் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கொண்டு சேர்ப்பது தனது கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கீர்த்தனா

மேலும், "நான் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில்  படித்து வளர்ந்தவள். இன்று அந்தக் குழந்தைகளில் ஒருத்தியாகவே என்னை நான் பார்க்கிறேன். உயர்கல்விக்கும், கார்ப்பரேட் உலகிற்கும் நான் சென்றபோது, அரசுப் பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நானே நேரடியாக அனுபவித்திருக்கிறேன். அதனால்தான், இந்த மாணவர்களின் எதிர்காலம் எனக்கு அரசியலைவிட மிக முக்கியமானது!" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தன் மீது பொய்யான கதைகளைக் கட்டி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதை விடுத்து, பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதே இப்போதைய தேவை என்று அமைச்சர் கீர்த்தனா வலியுறுத்தியுள்ளார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், தற்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுடனும் இணைந்து, தமிழக அரசுப் பள்ளிகளின் இந்த நிலையை மாற்றுவதற்காகத் தவெக அரசு தொடர்ந்து செயல்படும் என்றும், அரசியல் என்பது உண்மையை மூடிமறைப்பது அல்ல, மாறாகக் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுதான் என்றும் கூறி தனது எக்ஸ் பதிவை அமைச்சர் நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் கல்வித் துறை சார்ந்த விவாதங்கள் மேலும் சூடுபிடித்துள்ளன.