அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்த அமைச்சர் மதன் ராஜா - பொதுமக்கள் மத்தியில் பாராட்டு!

 
அமைச்சர் மதன் ராஜா அமைச்சர் மதன் ராஜா

பொதுமக்களுக்கான மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசு தீவிரக் கவனம் செலுத்தி வரும் நிலையில், தமிழக அமைச்சரவையின் முக்கியப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவர் தனது தந்தைக்கு அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளார். தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் மதன் ராஜாவின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவலான விவாதத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

அமைச்சர் மதன் ராஜாவின் தந்தை கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். பொதுவாகப் பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது குடும்பத்தினருக்குச் சிகிச்சை அளிக்கப் பெருநகரங்களில் உள்ள அதிநவீன தனியார் மருத்துவமனைகளை நாடும் சூழலில், அமைச்சர் மதன் ராஜா அதற்கு மாறான ஒரு முடிவை எடுத்துள்ளார்.

தனது தந்தையின் சிகிச்சைக்காக அவர் திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்துள்ளார். நேற்று தந்தை மருத்துவமனையின் விசேஷப் பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள மருத்துவக் குழுவினர் அவருக்குத் தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு, தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

அமைச்சரின் இந்த எளிய மற்றும் முன்மாதிரியான செயல், அரசு மருத்துவமனைகளின் தரம் மற்றும் உள்கட்டமைப்பு மீது பொதுமக்களுக்கு உள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

தற்போது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூத்த பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அமைச்சரின் தந்தைக்குத் தேவையான தீவிரச் சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர். அவரது உடல்நிலை தற்பொழுது சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.