அமைச்சர் மரிய வில்சனுடன் சமரசத்திற்கு மறுப்பு... வழக்கு விசாரணையை நேரடியாகச் சந்திக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

 
மரிய வில்சன்

சொத்துத் தகராறு காரணமாக வீடு புகுந்து தாக்கிய வழக்கில், அமைச்சர் மரிய வில்சனுடன் சமரசப் பேச்சுவார்த்தைக்கு விருப்பமில்லை என அவரது அண்ணன் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி எழில் நகரில் உள்ள தனது அண்ணன் மேரி கிளாட் வீட்டிற்குள் கடந்த 2022-ஆம் ஆண்டு அத்துமீறி நுழைந்து, அவரையும் அவரது மனைவி கரோலின் கிளாட்டையும் தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மற்றும் அவரது தந்தை நெஸ்டர் ஆகியோர் மீது புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

மரிய வில்சன் 

புதுச்சேரி நீதிமன்றத்தில் உள்ள இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் மனு தாக்கல் செய்திருந்தார். குடும்பப் பிரச்சனை என்பதால் சென்னை உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையம் மூலமாகத் தீர்வு காண நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, அமைச்சருடன் எந்தவிதச் சமரசத்திற்கும் விருப்பமில்லை என்றும், நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணையை நேருக்கு நேர் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட சகோதரரின் மனைவி நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டார்.

அமைச்சர் மரிய வில்சன்

சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனுவை வழக்கின் உண்மைத் தன்மையின் அடிப்படையில் ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.