அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல... உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

 
மரிய வில்சன்

 

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனக் கூற முடியாது என்றும், அவர் இங்கிலாந்து அரசர் அல்ல என்றும் சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந் தேதி, புதுச்சேரி எழில் நகரில் வசிக்கும் தனது சகோதரர் மரிய குலோத்தின் வீட்டுக்குள் கதவை உடைத்து அத்துமீறி நுழைந்து தாக்கியதாகக் கூறப்படும் வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

உயர்நீதிமன்றம்

அப்போது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அமைச்சருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாது என்று கூறுவதற்கு நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல என்று சுட்டிக்காட்டினார். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதுகூட கோர்ட்டில் ஆஜராகி இருப்பதாகவும், அமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பு ஆஜரானவர் தற்போது மட்டும் ஆஜராக மாட்டாரா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சென்னை உயர்நீதிமன்றம்

மேலும், அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல என்று குறிப்பிட்ட நீதிபதி, அவர் எந்த தேதியில் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராவார் என்பதைத் தெரிவிக்கும்படி உத்தரவிட்டார். வேளாங்கண்ணிக்குச் சென்று திரும்பும்போது அமைச்சர் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராகலாமே என்றும் நீதிபதி கருத்துத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி பிற்பகலுக்குத் தள்ளிவைத்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.