வட அமெரிக்கத் தமிழ் விழாவில் 'வான்புகழ் வள்ளுவம்' ஆவணப் படத்தை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்!

 
ராஜ்மோகன்

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் நியூ ஜெர்சி தமிழ்ப் பேரவை இணைந்து நடத்திய 39-வது ஆண்டுத் தமிழ் விழாவில், தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.

அயலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பரப்பவும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விழாவில், கல்வி மற்றும் கலைத் துறை சார்ந்த பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, தமிழ் மொழியின் உலகப் பொதுமறையான திருக்குறள் மற்றும் திருவள்ளுவரின் பெருமைகளை உலகறியச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 'வான்புகழ் வள்ளுவம்' என்ற ஆவணப் படத்தை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

அயலகத்தில் வாழும் இளந்தலைமுறையினருக்குத் தமிழ் அறநெறிப் பண்புகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த ஆவணப் படம் திரையிடப்பட்டது. அமெரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகருக்குச் சென்ற அமைச்சர் ராஜ்மோகனுக்குச் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.  ஹூஸ்டனுக்கான இந்தியத் துணைத் தூதரகத்தின் இந்தியத் துணைத் தூதர் டி.சி.மஞ்சுநாத், அமைச்சர் ராஜ்மோகனைத் தனது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வரவேற்றுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ்வழிக் கல்வி குறித்து ஆலோசனை: இந்தச் சந்திப்பின் போது, வட அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கான தமிழ்வழிக் கல்வி உள்கட்டமைப்புகள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அடுத்தகட்ட திட்டங்கள் குறித்துப் பேசப்பட்டதாகத் தெரிகிறது.