அமைச்சர் வன்னி அரசு பயணித்த விமானம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு!

 
வன்னி அரசு

சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிப் பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம், அப்பகுதியில் நிலவிய மோசமான மற்றும் சாதகமற்ற வானிலை காரணமாகக் கோவையின் வான்வெளியில் பல முறை வட்டமடித்த சம்பவம் பயணிகளிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் விசிக துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான வன்னி அரசு பயணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருந்து சுமார் 100 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் கோயம்புத்தூர் விமான நிலையத்தை அடையவிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

வன்னி

கோவை மற்றும் திருப்பூர் வான்பரப்புப் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மோசமான வானிலை நிலவியதால், பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு விமானி உடனடியாக விமானத்தைத் தரையிறக்காமல் வான்வெளியிலேயே 4 முதல் 5 முறை தொடர்ச்சியாக வட்டமடிக்கச் செய்தார்.

அமைச்சர் வன்னி அரசு உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்படாமல் வானில் நீண்ட நேரம் வட்டமடித்தது கோவை விமான நிலைய வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், வானிலை சற்று சீரடைந்ததை அடுத்து விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.